திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி கோயில்

“இருமனம் கலப்பது தான் திருமணம்” என்பது ஆன்றோர்களின் வாக்கு. வாழ்வில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் சில ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சரியான காலங்களில் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போய் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களின் குறையைப் போக்கி, அவர்களுக்கு நல்வாழ்க்கை துணையை அளிக்கும் இறைவன் “திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி”. இந்த இறைவனையும் இத்திருத்தலத்தின் சிறப்புகளை பற்றியும் இங்கு அறியலாம்.

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த வம்சத்தின் பேரரசியான செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது இக்கோவில். ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலம் இது. பூவுலகில் மனித குலப் பெண்ணாகப் பிறந்து சிவபெருமானை மணக்க விரும்பிய பார்வதி தேவி, இந்த தலத்தில் தவம் புரிந்து அந்த சிவபெருமானை மணந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தெய்வீக திருமணத்தைப் பார்வதிக்குச் சகோதரனாக இருந்து மகாவிஷ்ணுவே நடத்தியதாகத் தல புராணம் கூறுகிறது. இத்தகைய தெய்வீக திருமணம் நடந்த புனிதஸ்தலம் ஆகியதால் இந்த ஊர் “திருமணஞ்சேரி” என அழைக்கப்பட்டது.

தலத்தின் சிறப்பு மற்றும் வழிபாடு

இக்கோவிலின் சிறப்பாகத் திருமணத் தடை, தாமத திருமணம், சரியான வரன் அமையாமை போன்ற காரணங்களினால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் ஆண்களும், பெண்களும் இக்கோவிலிற்கு வந்து, இக்கோவிலின் இறைவனான ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் பார்வதி தேவிக்கு மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

இறைவனுக்குப் பூஜை முடித்த பின்பு அவருக்குச் சாற்றப்பட்ட மாலைகளை இங்கு வேண்டுதலுக்காக வந்திருக்கும் திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, இக்கோவிலின் பிரகாரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

இதற்குப் பின்பு அந்த மாலைகளை அவர்களின் பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைத்து, திருமணம் முடிந்த பின்பு அந்த மாலையைத் தம்பதிகளாக வந்து இக்கோவிலின் இறைவனை வணங்கி இந்த கோவிலிலேயே விட்டுவிடுகிறார்கள்.

தினந்தோறும் திருமணம் நடக்க வேண்டி ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இக்கோவிலிற்கு வருகின்றனர். அதில் இருந்து நாம் இக்கோவிலின் சக்தியை அறிந்துகொள்ளலாம்.

திருமணஞ்சேரி கோவில் அமைவிடம் :

கும்பகோணத்திலிருந்து சற்று தொலைவில் திருமணஞ்சேரி என்கிற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் இந்த ஊரை அடையலாம். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து அதிகளவு அரசு பேருந்துகள் வாடகை வண்டிகள் திருமணஞ்சேரிக்கு இயக்கப்படுகின்றன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் 1.30 மணிவரை

பிற்பகல் 3.30 முதல் இரவு 8.00 மணிவரை

திருமணஞ்சேரி கோவில் முகவரி :

உத்வாகநாதர் திருக்கோவில், திருமணஞ்சேரி

மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ் நாடு 609 801