சென்னை:
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போராட்டம் நடத்தலாம் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 27 இடங்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை காவல்துறை, தற்போது சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ள இடங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 30-6-2012 முதல் இந்த தடை அமலில் இருந்துவருகிறது.
தடையை மீறி பனகல் மாளிகை அருகே ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முயற்சிப்பதை அரசியல் கட்சிகளும், மற்ற அமைப்புகளும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தடையை மீறி பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த முயற்சித்தால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
கைது செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்காக பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் பேரணி நடத்த எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு கூவம் சாலை வழியாக லாங்க்ஸ் கார்டன் – பாந்தியன் சாலை சந்திப்பு வரை தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களுக்கு கீழ்க்கண்ட 27 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1.சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாராயணப்பன் தெரு,
2.சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகில்,
3.சிந்தாதிரிப்பேட்டை, காயிதே மில்லத் மணிமண்டபம் – பின்னி லிங்க் சாலை அருகில்,
4.நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்,
5.திருவொற்றியூர், மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில்,
6.மாதவரம், மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில்,
7.சோழிங்கநல்லூர், கே.கே. சாலை அருகில்,
8.மணப்பாக்கம், அம்பேத்கர் சிலை அருகில்,
9.சி.பல்லாவரம், ரங்கநாதன் முதலி தெரு, அம்பேத்கர் சிலை அருகில்,
10.பம்மல் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில்,
11.மடிப்பாக்கம் கூட்ரோடு, மூவரசன்பேட்டை பிரதான சாலை,
12.ஆதம்பாக்கம், அம்பேத்கர் திடல்,
13.பள்ளிக்கரணை, மாநகராட்சி வார்டு அலுவலகம் 189 மற்றும் 190 எதிரில்,
14.சிட்லப்பாக்கம், வரதராஜா திரையரங்கம் எதிரில்,
15.பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை பாரதியார் சாலை சந்திப்பு,
16.சேலையூர், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில்,
17.அம்பத்தூர், உழவர் சந்தை அருகில்,
18.ஆவடி பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில்,
19.ஆவடி நகராட்சி அருகில்,
20.ஆவடி, ஜெகஜீவன்ராம் சிலை அருகில்,
21.அயப்பாக்கம் தண்ணீர் தொட்டி அருகில்,
22.பட்டாபிராம், ரெயில்வே மேம்பாலம், சி.டி.எச். சாலை அருகில்,
23.திருநின்றவூர், காந்தி சிலை அருகில்,
24.குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில்,
25.நசரத்பேட்டை, முத்துராமலிங்கர் சிலை, காமராஜர் சிலை அருகில்,
26.குன்றத்தூர், அண்ணா சிலை அருகில்,
27.மாங்காடு, சண்முக சுவாமி கோவில் அருகில்.