பஞ்சமுகி ஹனுமான் கோயில்,கராச்சி
பாகிஸ்தானின் கராச்சி நகரில், நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் ஓர் இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கராச்சியின் ஜாம்ஷெட் டவுன் அருகிலுள்ள “சோல்ஜர் பஜார் என்ற இடத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான பஞ்சமுகி அனுமான் மந்திர் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில், எட்டு அடி உயரம் கொண்ட, சுயம்பு அனுமான் விக்கிரகம் இருக்கிறது.
அதனால் அப்பகுதி இந்துக்கள் மத்தியில், இக்கோவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. கராச்சியின் பல கோவில்களின் நிலைமையைப் போலவே, இக்கோவிலைச் சுற்றியிருந்த நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. இவற்றில் ஒரு பாதியைக் கோவில் நிர்வாகம் மீட்டிருக்கிறது.
இன்னும் அது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகின்றன. அதேநேரம் கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளும் பல்வேறு இடையூறுகளுக்கிடையில் நடந்து வருகின்றன.
மொத்தம், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இப்பணிகள், இடையில் நன்கொடைகள் வராததால் தேங்கிக் கிடந்தன. எனினும், சிந்து மாகாணத்தின் சிறுபான்மை அமைச்சகம் அளிக்கும் நிதியுதவியைப் பெறாமல், ஏழை இந்துக்கள் மற்றும் முட்டாகிதா குவாமி இயக்கம் ஆகியோரின் உதவியால், நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன.
மொத்த மதிப்பீட்டில் பாதியளவு நன்கொடைகள் திரட்டப்பட்ட நிலையில், கோவிலின் மூலஸ்தானம் தவிர, மடைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகள், புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பழைய கற்கள் அகற்றப்பட்டு புதிய கற்களால் சுவர் எழுப்பப்பட்டு வருகின்றன.