கணேச நவராத்திரி!
அம்பிகையை வேண்டி ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கும் நவராத்திரியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
அது போலவே வேழ முகனை வேண்டி நவராத்திரி கொண்டாடும் பழக்கம் சில இடங்களில் உள்ளது. ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக ஒன்பது நாட்கள் இந்த கணேச நவராத்திரி கடைப்பிடிக்கப் படுகிறது. இந்த விரதத்தினைக் கடைப்பிடிப்போர். அறுகம்புல் தீர்த்தத்தினை அருந்தவேண்டும் என்ற ஐதிகம் இருப்பதால், இது அறுகுநீர் அருந்தும் விரதம் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கடைப்பிடிப்பதால் இல்லத்தில் நல்லவை நடக்கும். பல காலக் கடன்கள் பைசலாகும். சுபிட்சம் தங்கும். உடலும் மனமும் நலம்பெறும் என்பது நம்பிக்கை.
இந்த விரதத்தினைத் தொடங்கும் நாளில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து (பூஜை) தொடங்க வேண்டும். தொடர்ந்து நீர் நிறைந்த கலசத்தில் அவரை எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டு, அறுகம்புல் சாத்தி, பிள்ளையாரின் இருபத்தொரு பெயர்களைச் சொல்லி வாசனை மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் சொல்லிவிட்டு, கணேசப் பெருமானே, எங்கள் குடும்பம் வளமும் நலமும் பரிபூரணமாக அருள்வாயாக என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த விரதம் இருப்போர், ஒரு செப்பு அல்லது மண் செம்பில் சிறிது ஏலக்காய், பச்சைக் கற்பூரம் பொடி செய்து போட்டுத் தண்ணீர்விட்டு, சுத்தமானதும் பிள்ளையாருக்கு அர்ப்பணித்ததுமான அறுகம்புல்லைச் சிறிது அதில் போட்டு, கலசத்தின் அருகே வைத்துவிட வேண்டும். தினமும், காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் அந்த நீரில் சிறிதைத் தீர்த்தமாக உட்கொள்ளவேண்டும்.
ஒன்பது நாட்களும் ஒரு பொழுது மட்டுமே அரிசி சேர்த்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற இரண்டு வேளைகள், சிறிது பால், அல்லது பழம் எடுத்துக் கொள்ளலாம். பத்தாம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று அவரவர் வழக்கம்போல் பிள்ளையாருக்குப் பூஜைகள் செய்து முடித்த பிறகு பிள்ளையாருக்குப் படைத்த பிரசாதங்களை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அன்றைய தினம் ஏழை குழந்தைகளுக்கு இயன்ற உணவு, உடை, கல்விக்கான உதவி செய்வது சிறந்த பலன் தரும்.