டில்லி

ஃபேல் ஒப்பந்தம் குறித்த சி ஏ ஜி அறிக்கை நாடாளுமறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் கடும் ஊழல் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் அதற்கு பாஜக தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பிரபல பத்திரிகையாளரான இந்து என் ராம் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் பேரம் பேசியதாகவும் பாதுகாப்புத் துறையின் பேச்சு வார்த்தைகள் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சி ஏ ஜியின் கணக்கு தணிக்கை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், “இந்திய விமானப்படை தங்களுக்கு தேவையான விமான விவரங்கள் குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை. இதில் பல நடவடிக்கைகள் சேவை மற்றும் பராமரிப்பு பிரிவில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. ஆகவே ஒருங்கிணைந்த கொள்முதல் பிரிவினால் இவர்களின் தேவையை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

எனவே இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் பாதுகாப்பு அமைச்சகம் ஒருமுறை சோதனை இட வேண்டும். இவர்களால் தங்கள் தேவைகள் குறித்து சரியாக விவரிக்க இயலாததால் எந்த ஒரு விமான வர்த்தக நிறுவனமும் தேவைகளை முழுமையாக புரிந்துக் கொள்ள இயலவில்லை.

அது மட்டுமின்றி தேவையான பல அம்சங்கள் இடையிடையே சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் தொழில் நுட்பம் மற்றும் விலையை நிர்ணயம் செய்வது ஆகியவை கடினமாகி உள்ளன.  அத்துடன் இதனால் கொள்முதல் குறித்த முடிவு எடுக்கவும் மிகவும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் பல விமான வர்த்தகர்கள் இது குறித்து விலைப்புள்ளிகள் தரவில்லை. அதனால் இந்த கொள்முதலில் போட்டி என்பது மிகவும்குரைந்துள்ளது. அதாவது விலை அளிக்க அழைக்கப்பட்ட நிறுவனங்களை விட விலை அளித்த நிறுவனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.

இந்த கொள்முதலில் மிகவும் குறைந்த விலை என்னும் வழியை விட சிறந்த விலையில் சிறந்த பொருள் என்னும் முறை கடைபிடிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த கொள்முதல் குறித்த முடிவெடுக்க மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. இவை பல படிகளில் உள்ள அனுமதி மற்றும் ஒப்புதலை பெற நேர்ந்த தாமதத்தினால் நிகழ்ந்துள்ளன.” என குறிப்பிடப் பட்டுள்ளது.