சென்னை: பரந்தூரில் அமைய உள்ள சென்னையின் 2வது விமான நிலையம் ரூ. 20 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக விவசாய நிலங்கள், 5 ஏரிகள், 2500 குடியிருப்புகள் கையகப்படுத்தப்படும் என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இது 2வது தொழிற்புரட்சி என்றும் பெருமிதமாக தெரிவித்து உள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழகஅரசு தயாராகி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில், அது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்பட வழிவகுக்கும் என தெரிவித்தார். மேலும், பரந்தூரில் விமான நிலையம் அமைவதன் மூலம் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் வசதிகளும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
பரந்தூர் விமான நிலையம், ரூ.20ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக தற்போது 4,000 ஏக்கர் நிலம் தற்போது தயாராக உள்ளது என தெரிவித்த வர், விமான நிலையம் அமைக்க இன்னும் 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியது உள்ளது என்றவர், அதற்காக விவசாய நிலங்கள், 5 ஏரிகள், 2500 குடியிருப்புகள் கையகப்படுத்தப்படும் என்றார்.
இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது தமிழ்நாட்டை 1டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் மற்றொரு மைல் கல் என்றும், இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபின் புதிய விமான நிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும் என்றும் தற்போதைய உத்தேச திட்டமதிப்பு ரூ.20,000 கோடி எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.