கோவை:

றுமையின் கோர தாண்டவத்தில் சிக்கி, பசி பட்டினியுடன் வாடிய இளைஞர் ஒருவர், உணவுக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் 3 வேலை உணவு கிடைக்கும் என்பதால்,  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தைத் தொடர்ந்து, மனச்சோர்வு காரணமாக வேலையை இழந்த நிலையில், உணவுக்கே வழியின்றி திண்டாடி உள்ளார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், சிறைக்குச் சென்றால், அங்கு 3 வேலை உணவு கடைக்கும் என்ற ஆசையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை  சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த சந்தோஷ், தனது பெயர் இப்ராகிம் என்று கூறிக்கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நடத்திய விசாரணையை தொடர்ந்து, அந்த மொபைல் எண் வாங்கப்பட்டமுகவரியை கண்டுபிடித்து,  சிவகுமார் என்பவரை  பிடித்து விசாரணை செய்தபோது, அவர், தனது  மைத்துனர் லிங்கராஜ் என்பவர் உபயோகப்படுத்தி வருவதாக கூறினார்.

ஆனால், லிங்கராஜையும்  பிடித்த காவல்துறையினர், அவரது மொபைல் ஏறகனவே  தொலைந்துபோனது என்ற தகவலை கேட்டு நொந்து போயினர். இதையடுத்து, மிரட்டல் விடுத்த போன்  செயல்பட்டு வரும் இடம் குறித்து அறிந்த காவல்துறையினர்,  ஈரோடு ரயில் நிலையத்தில் படுத்திருந்த சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

அவரை கைது செய்து விசாரித்த போலீசார், அவர் கூறிய தகவல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். 3 வேளை உணவுக்காக மிரட்டல் விடுத்ததாக கூறிய சந்தோஷ்குமார் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.