தேனடைக்கு ஆசைப்பட்டு…

தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் …

சிக்கியது எப்படி ?

அடை …. தேனடை…

நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படும் ‘தேன்’ யாவும் கலப்படம் செய்யப்பட்டவை என்ற ஆய்வின் முடிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது, தற்போது வெளிவந்திருக்கும் இந்த தகவலை தொடர்ந்து, இதுபோல் எத்தனை காலமாக அப்பாவி இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை, இந்த தேனில் கலந்த ஊழலை அலசி ஆராய்ந்த அமைப்பு டவுன் டு எர்த் என்ற இணையதளத்தில் இதுகுறித்து தனது புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

கசந்து போன தேனீ வளர்ப்பு

கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இளம் சூடான நீரில் தேனை கலந்து காலையில் குடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்துவரும் மக்கள், தவிர,  மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கும் தேனில் கலந்து மருந்தை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி இருந்தும், தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு போதுமான வருமானம் இல்லையென்றும், பலர் தேனீ வளர்ப்பு தொழிலையே விட்டுவிட்டதாகவும் வரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு உத்திர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்த புலனாய்வு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேன் வியாபாரம் அப்படியொன்றும் இனிக்கவில்லை என்று கூறும் சிறு மற்றும் பெரு வணிகர்களுக்கு  கூட அதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. சில வியாபாரிகள், தேனில் சர்க்கரை பாகு கலந்து வருவதால் யாரும் அதிகம் வாங்குவதில்லை என்று கூறினாலும், அதற்கு மேல் அவர்களுக்கும் விவரம் தெரியவில்லை.

விவரமறிந்த வியாபாரி ஒருவரோ, சீன தயாரிப்பு முறைகளை கையாண்டு அரிசி மற்றும் பிற தானியங்களில் இருந்து எடுக்கப்படும் இனிப்பான திரவம் இதில் கலக்கப்படுவதாக கூறினார். அதுபோன்ற, ஆலைகள்  உத்தரகாண்ட், உத்திர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ளது என்று கூறினார்.

இதுபோன்று அரிசி மற்றும் பிற தானியங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை பாகு போன்ற திரவம் பிஸ்கட், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது, இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. இருப்பினும் இதுகுறித்த புலனாய்வு தொடர்ந்தது.

உலகில் அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவு

உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 7000 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் செய்யப்படும் பொருளாக தேன் இருக்கிறது.

‘தேன்’, உலகில் அதிகம் கலப்படம் செய்யப்படும் உணவாகவும் அதற்காக அனைவரையும் வருத்தப்பட வைப்பதாகவும் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்த மோசடியும் கலப்படமும் சமீபகாலங்களில் அதிகரித்திருக்கிறது, தேனை பல நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் சந்தைப்படுத்த ஆரம்பித்த பின் இது மிகவும் அதிகரித்திருக்கிறது.

கலப்படத்தை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இந்த மோசடி  பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அரசுக்கும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் இதுகுறித்து எதுவும் தெரியாது என்று சொல்வதற்கில்லை.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு முறை தேனுக்கான தரக்கட்டுப்பாட்டு விதிகள் மாற்றம் செய்திருப்பதிலேயே அரசுக்கு இதுகுறித்து தெரியும் என்றே எண்ண வேண்டியுள்ளது. அல்லது, இதை அறிந்து, மோசடிகளை தடுக்க மாற்றங்களை மேற்கொண்டுள்ளது என்று தெரிகிறது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) முதல் முறையாக 2014 ல் தேனில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறித்த தரத்தின் அளவை மாற்றியமைத்தது.

புதிதாக, நிர்ணயிக்கப்பட்ட இந்த தரத்தை அடைய கலப்பட தொழிலில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2017 ம் ஆண்டு அரிசி, கரும்பு, பீட்ரூட், மக்காசோளம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை உள்ளிட்ட வெளிநாட்டு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம்  சோதனை செய்ய தொடங்கியது.

மக்காசோளம் மற்றும் கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரையானது சி-4 சர்க்கரை பாகு என்று தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களால் அழைக்கப்படுகிறது.

இந்த சி-4 சர்க்கரை பாகு பரிசோதனையில் எளிதாக கண்டுபிடிக்கப்படுவதால் இதனை தவிர்க்க மாற்று வழிகளை ஆராய ஆரம்பித்த கலப்பட உலகம், சி-3 எனும் அரிசி மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பாகை 2017 க்குப் பின்  பயன்படுத்த ஆரம்பித்தன.

பரிசோதனை கூடங்களின் கண்ணில் மண்ணை தூவும் நோக்கத்தோடு அதிவேக பரிணாம வளர்ச்சி பெற்ற கலப்பட சந்தை, சி-3 வகை சர்க்கரை பாகு பயன்படுத்தி வந்தது.

தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அரிசியில் உள்ள மாவுச்சத்து, கஞ்சிப் பசை குறித்த தடங்களை பரிசோதிக்க அரிசி பாகு குறித்த சிறப்பு ஆய்வு (எஸ்.எம்.ஆர்./ SMR) மற்றும் அரிசி பாகு குறித்த தட ஆய்வு (டி.எம்.ஆர். /TMR) ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள தொடங்கின.

2019 அக்டோபரில் தேனில் உள்ள மகரந்த அளவின் எண்ணிக்கையை குறைத்ததோடு, எஸ்.எம்.ஆர்.,  டி.எம்.ஆர். பரிசோதனையையும் நிறுத்திக்கொண்டது. தனது பரிசோதனை அளவுகோலை மீண்டும் மாற்றியமைத்த இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு வாரியம் அதற்கான காரணத்தை விளக்கவில்லை.

எஸ்.எம்.ஆர். மற்றும் டி.எம்.ஆர். பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டிருந்தால், அரிசி சர்க்கரை பாகு கலப்படம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கும் மேலும், 2017 ல் 50000 என்ற எண்ணிக்கையில் இருந்த மகரந்த அளவை 2018 ல் 25000 மாகவும் 2020 ல் 5000 மாகவும் குறைத்திருப்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.

அதேவேளையில், 2020 மே மாதம் இந்திய உணவு பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது, அதில், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கோல்டன் சிரப், சர்க்கரை பாகு, அரிசி பாகு ஆகியவை குறித்து முறையான கணக்கை இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

தவிர, வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் தேனுக்கு தரக்கட்டுப்பாட்டு விதிகளை அதிகரித்ததோடு, புதிதாக அணு காந்த அதிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி (என்.எம்.ஆர். / NMR) எனும் பரிசோதனையும் மேற்கொண்டது.

இதன் பின், டாபர் மற்றும் சபோலா நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் என்.எம்.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற குறிப்புகளை  பதிவு செய்ய ஆரம்பித்தது.

ஜெர்மன் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த என்.எம்.ஆர். சோதனை கலப்படத்தை பெருமளவு தடுக்க உதவும் என்பதால் பல்வேறு நாடுகள் தற்போது இந்த பரிசோதனை முறையை கையாள்கின்றன. இருந்தபோதும், மோசடி பேர்வழிகள்  வெகுவிரைவில் இதையும் ஏமாற்றக்கூடிய வழிகளை கண்டுபிடித்து விடுவார்கள்.

சீனாவை நோக்கி

இந்த புலனாய்வில் தெரியவந்த இரு விவரம், ஒன்று தேனீ வளர்ப்பவர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் திண்டாடுவது, மற்றொன்று சர்க்கரை பாகு கலப்படத்தை கண்டுபிடிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள்.

அடுத்ததாக, இதில் என்னதான் கலக்கப்படுகிறது என்ற கேள்விக்கு  இறக்குமதி செய்யப்படும் கோல்டன் சிரப், சர்க்கரை பாகு, அரிசி பாகு ஆகியவை குறித்த விவரங்களை ஏன் உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் கேட்கிறது என்ற கேள்வியில் இருந்து புலனாய்வை தொடர்ந்தபோது, அது சீனாவை நோக்கி நீண்டது.

கோல்டன் சிரப், சர்க்கரை பாகு, அரிசி பாகு போன்றவை இந்திய உணவு பொருள் தயாரிப்பாளர்களால் பெருமளவு இறக்குமதி செய்யப்படவில்லை என்றபோதும், சீனாவின் அலிபாபா போன்ற வலைத்தளங்களில் சர்க்கரை தொடர்பான உணவுப்பொருட்கள் வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது என்ற உண்மை தெரியவந்தது.

இந்த பொருட்கள், இந்தியாவுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதும் அவை தொழிற்சாலை மூல பொருள் என்ற குறிப்புடன் வருவதும் தெரியவந்தது.

இவ்வாறு இறக்குமதி செய்யும் 166 இறக்குமதி நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் பஞ்சாப் மாநிலத்திலும், 30 நிறுவனங்கள் டெல்லியிலும், 15 நிறுவனங்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உள்ளன.

இதுகுறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் டவுன் டு எர்த் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முறையான பதில் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், இதுகுறித்த புலனாய்வை தன்னிச்சையாக தொடர முடிவு செய்து களத்தில் இறங்கியது.

சீன நிறுவனங்களை அணுக முடிவு செய்த அந்த குழு, சீனாவில் உள்ள இரண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேனில் கலக்கக்கூடிய சர்க்கரை பாகு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

தங்களிடம் உள்ள சர்க்கரை பாகு, இந்தியாவில் அனைத்து தர பரிசோதனைகளையும் சமாளிக்க கூடிய தன்மை கொண்டது என்றும், 50 முதல் 80 விழுக்காடு கலப்படம் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளனர். மேலும், கிலோ 53 ரூபாயிலிருந்து 71 ரூபாய் வரை தர வாரியாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு சீன நிறுவனம், தங்கள் சர்க்கரை பாகு மாதிரிகளை இரண்டு 500 எம்.எல். பாட்டில்களில் ஹாங்காங் வழியாக கூரியர் மூலம் அனுப்பிவைத்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருளுக்கு தற்போது கட்டுப்பாடுகள் நிலவுவதால், சுங்கத்துறையை சமாளிக்க ஹாங்காங் வழியாக இந்த பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.

அதேவேளையில், உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்புரில் உள்ள இந்திய இறக்குமதியாளரை அணுகிய இந்த குழு, அவர்களிடமிருந்து கிலோ ரூபாய் 68 க்கு மாதிரிகளை வாங்கியது, அதிகளவு வாங்கும் பட்சத்தில் 65 ரூபாய்க்கு தருவதாக அவர்கள் கூறினர்.

இதோடு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நம்பிக்கையான தேனீ வளர்பவரிடமிருந்து சுத்தமான தேனையும் வாங்கிய அந்த குழு.

பல்வேறு அளவுகளில் இதனை கலந்து தர பரிசோதனைக்கு அனுப்பியதில், 75 சதவீத கலப்படம் தவிர மற்ற குறைந்த அளவு கலப்பட தேன் அனைத்தும் இந்திய மற்றும் ஏற்றுமதிக்கான தர  பரிசோதனையில் வெற்றி கண்டது.

இந்திய சந்தையில் மலிந்து கிடைக்கும் கலப்பட தேன்

இந்த பரிசோதனைகளை தொடர்ந்து இந்திய சந்தையில் விற்கப்படும் 13 முக்கிய நிறுவனங்களின் தேனை பரிசோதிக்க முடிவு செய்து அதனை இந்திய தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுப்பியதில், அவை சி-3 மற்றும் சி-4 கலப்படங்களை கண்டுபிடிக்க தவறியதோடு, இந்திய தரத்திற்கு உகந்தது என்று சான்றளிக்கப்பட்டது.

இதே மாதிரிகளின் மற்றொரு தொகுப்பை ஜெர்மனியில் உள்ள தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பியதில் 13 நிறுவனங்களை சேர்ந்த 22 மாதிரிகளில் 3 நிறுவனங்களின் 5 மாதிரிகளை தவிர மற்ற அனைத்தும் சர்க்கரை பாகு கலக்கப்பட்ட தேன் என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபரிடம் சுத்தமான தேனை ரூபாய் 120 க்கு வாங்கும் நிறுவனங்கள் சீன சர்க்கரை பாகை கிலோ ரூபாய் 60 க்கு இறக்குமதி செய்து இரண்டையும் கலப்படம் செய்து சந்தையில் விற்று அதிக லாபமீட்டி புறங்கையை சுவைக்கும் நிறுவனங்கள் அதிகரித்திருப்பதையே இந்த புலனாய்வு தெளிவுபடுத்துவதாக உள்ளது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் தேனில் மட்டுமே இத்தனை கலப்படம் இருப்பதும், இந்த கலப்பட தேனால் நமது உடலுக்கு தீங்கு ஏற்படுவதை நினைக்கும் போது, வேதனையாக உள்ளது.

சீனாவில் இருந்து எந்த ஒரு நாட்டின் வழியாகவும் சீன சர்க்கரை பாகு இறக்குமதி செய்யக்கூடாது என்றும், தேன் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், தாங்கள் தேனை எந்த தேனீ வளர்பவரிடமிருந்து வாங்கப்பட்டது என்ற குறிப்புகளோடு தயார் செய்ய வேண்டும் என்பன போன்ற கடுமையான நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே தேன் இனிக்கும்.