சென்னை: சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் ஜூன் 3ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம், கலைஞர் கருணாநிதியின் சிலையை பாஜகவைச் சேர்ந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும்,. அன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞருக்கு 16 அடி உயர வெண்கல சிலை நிறுவப்படும் என்றும் கூறினார்.
அதைத்தொடர்ந்து, இதற்கான ஏற்பாடுகள் ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்று வருகின்றன. 12 அடி பீடமும், அதில் கலைஞரின் 16 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை போன்றே தத்ரூபமாக சிலையை வடித்து வருகிறார்.
இந்தச் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார். சமீபத்தில் துணைகுடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார். அப்போது, கருணாநிதி சிலை திறந்து வைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. அவரது அழைப்பை ஏற்று சிறை திறப்பு விழாவுக்கு வெங்கையா நாயுடு வரவுள்ளார். அவரது கரத்தால் கருணாநி சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
வெங்கையா நாயுடு பாஜகவைச் சேர்ந்தவர். தற்போது ராஜ்யசபா தலைவராகவும், துணை குடியரசு தலைவராகவும் இருந்து வருகிறார்.