சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாத இறுதியில் தொழில் முதலீடு பெற அமெரிக்கா செல்கிறார். இதன் காரணமாக, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கடந்த சில நாட்களாக முதலமைச்சருக்கு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது துறை மட்டுமின்றி மற்ற துறை பணிகளையும் தொடங்கி வைக்கிறார். அதனால், அவர் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஏராளமான தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால், இந்த தகவல்களை திமுக தலைமையோ, முதலமைச்சரோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கனவே கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, துணை முதலமைச்சர் பதவி குறித்து கூறும்போது, “ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் முதலமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே தான் நானும் சொல்கிறேன்” என வித்தியாசமாக விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தில் தனக்கு பதவி வேணுமா வேண்டாமா என்பதை தெரிவிக்காமல் மக்களை குழப்பிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதிக்கு நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சில செய்தியாளர்கள் அவரிடம் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என பதிலளித்தார்.
சிறிதளவு பெய்யும் மழைக்கே சென்னையில் தண்ணீர் தேங்குகிறதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எந்த அளவு மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அளவில் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்கட்சிகள் காட்ட வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை யும் எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.