மதுரை:

தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷாவை, 3 மணி நேரம் காத்திருந்து, இருமுறை சந்தித்துப் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, மதுரை விமான நிலையத்தில், துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஒதுக்கிய 5 தொகுதிகள் எவை, என்பது குறித்தும், பிரச்சார வியூகங்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை அடுத்து, பாஜக தலைவர் அமித்ஷா, ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றார்.

பட்டணம்காத்தான் கிராமத்தில் நடைபெற்ற, பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில், பாஜக 5 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை, என்றும் அதிமுக, பாமகவுடன் இணைந்து, 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வலிமையுடன் போட்டியிடுகிறது, என்றும் குறிப்பிட்டார்.

2-ஜி ஊழல் செய்த திமுக – காங்கிரஸ், எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும், என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, திமுக, காங்கிரஸ் என்றால் ஊழல், பாஜக என்றால் முன்னேற்றம், என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், மதுரை திரும்பிய அமித்ஷாவை, விமான நிலையத்தில் மீண்டும் சந்தித்துப் பேசினார் துணை முதல்வர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த சந்திப்புக்காக சுமார் 3 மணி நேரம்,  மதுரை விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.