சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2வது விமான நிலையம் அமைப்பது தொடர்பான  சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்போகிறதா? அது எங்கே அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து வரும் 17ந்தேதி முடிவு எடுக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் தொழில்நகரங்களில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை முன்னிலை வகிக்கிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து தினசரி பல ஆயிரம் பேர் சென்னைக்கு விமானம் வருகை தருகின்றனர். தொழில்துறை வளர்ச்சி காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் வருகை அதிகரித்துள்ளது.  மேலும், தொழில்நகரமாக சென்னை திகழ்வதால், மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில்,  தற்போது, சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி, மேலும் ஒரு விமான நிலையத்தை அமைக்க மத்தியஅரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.  அதற்கான இடத்தை ஒதுக்க தமிழகஅரசிடம் கேட்டுள்ளது. ஆனால், அதற்கான நிலம் எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சென்னையை சுற்றி உள்ள பல பகுதிகளில் நிலம் எடுக்க அப்பகுதி மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இடத்தை முடிவு செய்வதில் பல ஆண்டுகளாக இழுபறி நீடித்து வருகிறது.

இறுதியில், சென்னை அருகே உள்ள பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய தமிழகஅரசு அறிவுறுத்தியது. இதையடுத்து,  சென்னைக்கு வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் குழு பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு சென்றது. அதில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமையப்போகிறது என்பதற்கான முடிவு ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா தலைமையில் நடைபெற இருப்ப தாகவும், இதில் தமிழ்நாடு அரசு சார்பில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றில், விமான நிலையம் அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதன்பிறகு, அதுதொடர்பான இறுதிஅறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.