சென்னை: கோயம்பேட்டில் இருந்து புறப்படும்  அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக செல்லும் என  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்து இயக்கப்படாது  என குறிப்பிட்டுள்ளது.

தீபாவளியையொட்டி, தமிழ்நாடு அரசு ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.  இதனால் சென்னையில் போக்குவரத்து நெரில் ஏற்படாமல் இருக்கும் வகையில், இந்த பேருந்துகள், கோயம்பேடு, தாம்பரம், சானடோரியம், பூந்தமல்லி, மாதவரம்  என பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளிக்கு வழக்கமாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன்  தென்மாவட்டம் உள்பட  செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக செல்லும் என்றும்,  நகரின் உள்புற பகுதிகளான  வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்து இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதாவது, “தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களில் பயணிக்கலாம்”  என்றும், “ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்”  என்றும்  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.