டில்லி
கர்நாடகாவின் இலவச அரிசி திட்டத்துக்கு அரிசி வழங்க மறுப்பது ஏழைகளுக்கு எதிரானது எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அன்ன பாக்யா என்ற அந்தத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இதையடுத்து, வெளிச் சந்தையில் அரசி வழங்குவதை நிறுத்துவதாக இந்திய உணவுக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து இது பழிவாங்கும் நடவடிக்கை என அவர் விமர்சித்தார். இந்த இந்திய உணவுக் கழகத்தின் முடிவால், அன்ன பாக்யா திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் சித்தராமையா கூறி இருந்தார். இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்,
“இது மோடியின் ஏழைகளுக்கு எதிரான மற்றும் பழிவாங்கும் அரசியல் குறித்த நடவடிக்கை ஆகும்: கர்நாடகா இந்திய உணவுக் கழகத்திற்கு 100 கிலோ அரசிக்கு ரூ.3400 கொடுக்க கர்நாடகா தயாராக இருந்தும் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால் எத்தனால் உற்பத்திக்காகவும், பெட்ரோல் கலப்பிற்காகவும் 100 கிலோ அரிசியை ரூ.2,000 ரூபாய்க்கு இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து விற்பனை செய்கிறது. எல்லா நேரங்களிலும் உணவுப் பாதுகாப்பு என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்”
என டிவிட்டரில் பதிந்துள்ளார்.