கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் கடைசியான 4 சர்க்கஸ் யானைகளை அந்நாட்டு அரசாங்கம் வாங்கியுள்ளது. அவற்றுக்கு முறையான ஓய்வை வழங்கவே இந்த ஏற்பாடு என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டு விலங்குகளை சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் விரைவில் தடைவிதிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் உணவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மோகென்ஸ் ஜென்சன், வன விலங்குகளை சர்க்கஸ் நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்கான தடை இந்தாண்டு இறுதியில் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

டென்மார்க் அரசால் வாங்கப்பட்டுள்ள அந்த 4 யானைகளின் பெயர் ரம்போலின், லாரா, ஜுன்கா மற்றும் ஜென்னி. அவற்றை இனிவரும் நாட்களில் எ‍ஙகே வைத்துப் பராமரிப்பது என்கிற முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அவற்றைப் பராமரிக்கும் தன்னார்வலர்கள் முன்வரும்வரை, டென்மார்க் விலங்குகள் பாதுகாப்பு மையம் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த யானைகளைப் பிரிவது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது என்றும், அதேசமயம், அவற்றுக்கு சிறப்பான ஓய்வு வாழ்க்கை கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் சம்பந்தப்பட்ட சர்க்கஸ் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.