லக்னோ: உ.பி. மாநிலத்தில் விவசாயிகள் மீதான வன்முறை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், லக்னோ விமான நிலையம் வந்த சந்தீஸ்கர் முதல்வரை, விமான நிலையத்தை விட்டு வெளியேற உ.பி.மாநில காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால்,  விமான நிலையத்தில், பூபேஷ் பாகெல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். லகிம்பூர் கேரி  மாவட்டத்தில் மட்டுமே 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத லக்னோவில் அவர் தடுக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரைடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க  உ.பி. மாநில துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகை தர இருந்த நிலையில்,   எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நிகழ்ச்சிக்கு வருகை வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் உள்பட பாஜகவினரின் வாகனங்கள், விவசாயிகள் மீது மோதிச் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. . இதில் 4 விவசாயிகள், 4 பத்திகையாளர்கள் உள்பட 9  இறந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் லகிம்பூர் கேரி  மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திஉள்பட அரசியல் கட்சி தலைவர்கள் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற லக்கீம்பூா் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர், தடுப்பு காவலில் அடைத்து வைத்துள்ளனர்.

இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சத்திஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஸ் கால் இன்று உ.பி. மாநிலம் லக்னோவுக்கு விமானம் மூலம் வருகை தந்தார். அவர் பிரச்சினைக்குரிய லக்கீம்பூா் மாவட்டம் செல்வார் என கருதி, விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே உ.பி. காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால் கோபமடைந்த முதல்வர் பூபேஷ் பாகெல்,  லக்னோ விமான நிலையத்தின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். தான்  பிற்பகல் 2:30 மணிக்கு ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற வந்தாக கூறியும், அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேற காவல்துறையினர் மறுத்து விட்டனர். இதனால், மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லகிம்பூர் கேரி  மாவட்டத்தில் மட்டுமே 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத லக்னோவில், ஒரு மாநில முதல்வரை, உ.பி. காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பது நாடு முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.