சென்னை,
டெங்குக் காய்ச்சல் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோல் பலியாகி வருகின்றனர். இதுவரை 200க்கும் மேல் பலியாகி உள்ள நிலையில், அரசு டெங்கு கட்டுபடுத்தப்பட்டு வருகிறது என்று கூறி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்த் உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,.
”டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், டெங்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்று அத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
‘‘டெங்கு மற்றும் பிறக் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. இந்தக் காய்ச்சல்களின் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறையவில்லை. வடகிழக்கு பருவமழைத் தொடங்கவிருக்கும் நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கும்’’ என்று மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் தோல்வியை வெளிப்படையாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை உறுதி செய்யும் வகையில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
டெங்கு மட்டுமின்றி மூளைக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் ஆகியவையும் வேகமாக பரவி வருகின்றன. இவை தவிர பெயர் குறிப்பிடப்படாத மர்மக் காய்ச்சலும் வேகமாக பரவி ஏராளமானோரின் உயிர்களை பலி வாங்கி வருகிறது.
நடப்பாண்டில் கடந்த ஜுன் மாதத் தொடக்கத்தில் டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் உணரப்பட்டது. அதன்பின் 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முந்தைய 4 மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிக உயிரிழப்புகள் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்டுள்ளன.
இவ்வளவுக்குப் பிறகும் டெங்குக் காய்ச்சலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருவது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். அண்டை மாநிலமான கேரளத்தில் டெங்குவின் தாக்கம் தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. ஆனாலும், திட்டமிடப்பட்ட கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் டெங்குக் காய்ச்சலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கேரள அரசு முற்றிலுமாக கட்டுப்படுத்தியிருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தோ, டெங்குக் காய்ச்சலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தோ இன்று வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை.
இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தால் டெங்குக் காய்ச்சலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் முற்றிலுமாக தடுக்கப் பட்டிருக்கும். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்ட ஆட்சியாளர்கள், மக்கள் மீது பழி சுமத்தி தப்பிக்க முயல்கின்றனர். தமிழக அரசின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.