சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக, டெங்கு, இன்புளுயன்சா, பன்றி காய்ச்சல் போன்றவை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் நோயாளிகளின் கூட்டத்தால் தத்தளிக்கிறது. இதையடுத்து காய்ச்சல் தடுப்பு பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் 3 துறைகள் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு ஆகிய 3 துறைகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் இல்லை என்றும் டெங்கு போன்ற காய்ச்சல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.