சென்னை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும், மாநிலம் முழுவதும் 204 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதாவது தமிழகத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . மதுரை மாநகராட்சியில் கடந்த 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 2 வாரத்தில் 37 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இநத் நிலையில், காய்ச்சல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.