சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விஷக்காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரணியன், மிழ்நாட்டில் இன்புளுயன்சா, டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், 282 குழந்தைகள்  இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 243 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.  சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கைகள் நிரம்பியுள்ளதால், கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,   திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பருவ கால நோய்கள் என்றும், டிசம்பரில் நோய்களின் பாதிப்பு குறைந்துவிடும். இதனால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என  சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்ஃபுளுயன்சா என்ற HIN1 காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். HIN1 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு அரசு மருத்துவமனையிலும், 215 பேருக்கு தனியா மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் பதற்றமடையும் சூழல் இல்லை, குழந்தைகள் இருமும் போதும், தும்மும் போதும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் முகக்கவசம் அணிவது நல்லது என்றார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை. எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் என மறுப்பு தெரிவித்தவர், மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் காய்ச்சல் மாத்திரைகளை வாங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும், தேவையான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது என தெரிவித்த அமைச்சர், காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.