காந்திநகர்,

நாட்டில் கடந்த ஆண்டு பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு சட்ட விரோதம் என குஜராத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம்  அம்ரேலி நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

கடந்த ஆண்டு திடீரென நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டது.   500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டது. மோடியின்  இந்த நடவடிக்கையால்  நாடு முழுவதும் ஏழை, நடுத்தர மக்கள்  பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.  தங்களிடமிருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் பலியான சோகமும் நடைபெற்றது.

ஆனால்,  தொழிலதிபர்களோ தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற  எந்த வங்கிக்கு முன்பாவது வரிசையில் காத்திருந்ததைப் பார்க்க முடிந்ததா? அவர்கள் வங்கியின் பின்வாசல் வழியாக சென்று தங்கள் கறுப்புப் பணத்தைக் கொடுத்து மாற்றிக் கொண்டார்கள்.  மொத்தத்தில் பண மதிப்பு நீக்கம் என்பது சட்டவிரோத பணப்பரிமாற்ற திட்டம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மத்திய மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது.முதலில் நஷ்டத்தில் இயங்குவதாக அறிவித்த அந்த நிறுவனம்,  அடுத்த மூன்று மாதத்தில் ரூ.80 கோடி வருமானம் உயர்ந்தாக கூறி உள்ளது. இது எப்படி சாத்தியம்?”   இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதற்கு பாஜக எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.