சென்னை,

டந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு அமல்படுத்தியது. இதன் காரணமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாகாசாக மாறியது.

அப்போது நடுத்தர மக்களும், சாமானிய மக்களும் புதிய பணம் கிடைக்காமல் வங்கி வாசல்களில் காத்திருந்து காத்திருந்து வேதனை அடைந்தனர். அன்றாட செலவுக்கே பணமில்லாமல் திண்டாடினர்.

ஆனால், உயர்வகுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ, முக்கிய அதிகாரிகளோ, தொழிலதிபர்களோ  இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், அவர்களிடம் இருந்து பழைய நோட்டுக்களை வங்கி அதிகாரிகள் துணையோடு மாற்றி வந்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அதையடுத்து எடுத்த நடவடிக்கையின்போது, ஒருசில முக்கியஸ்தர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அப்போது நடைபெற்ற பண மாற்றுதலின்போது சுமார்  280 கோடி அளவிலான  பழைய ரூபாய் தாள்களை புதிய நோட்டுக்களாக சசிகலா குடும்பத்தினர் மாற்றியுள்ளது வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 5 நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்டுள்ள வருமானவரித்துறையினரின் ரெய்டு, அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.

சசிகலாவின் ரத்த சொந்தங்களான தினகரன், திவாகரன், பாஸ்கரன், விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில், ஜெயா டிவி, மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் போன்றவைகளில் இன்னும் சோதனை நடைபெற்று வருகிறது.

தோண்ட தோண்ட ஆவணங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின்படி கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக்கொண்டு, பண மதிப்பிழப்பின்போது,  280 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணம் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்டதும், அதேபோல சட்டத்துக்கு புறம்பாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே,   புதுச்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமி நகைக்கடையில் மட்டும் 168 கோடி ரூபாய்க்கு பணம் மாற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மக்கள் அன்றாட செலவுக்கே பணமில்லாமல் அல்லாடியபோது, சசிகலா தரப்பினர் இவ்வளவு கோடி பணத்தை மாற்றிய உள்ள தகவலைக் கேட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.