
புதுச்சேரி,
பண மதிப்பிழப்பை மத்திய அரசு அமல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கருப்பு தின ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது,
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களை கோமாளியாக்கியுள்ளது. பிரதமரை போன்று பூஜ்ய நிலையில் தான் கருப்பு பணம் வெளியில் வந்தது.
பாஜக வினர் மற்றும் பெரிய பண முதலைகளின் கருப்பு பணத்தை மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் நடைபெறவுள்ள குஜராத் தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்து மோடியின் சகாப்தம் நிறைவுக்கு வரும்.
மேலும் துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே புதுச்சேரி அரசின் அனைத்து திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் துணை நிலை ஆளுநர்கிரண் பேடி இனியாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்து திருந்துவாரா என நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
[youtube-feed feed=1]