டெல்லி:

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு முன்பு வங்கிகளில் எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவலை அளிப்பவரின்ர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அந்த தகவலை அளிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் அல்லோலப்பட்டனர். எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கான கெடு கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிந்துவிட்ட பிறகும் இன்று வரை சகஜ நிலை திரும்பவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையும், பண புழக்கத்தையும் புரட்டி போட்டது இந்த அறிவிப்பு.

இந்த அறிவிப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கியும், பிரதமர் அலுவலகமும் போக்கு காட்டி வருகின்றன. தகவல் இல்லை என்றும், வேறு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற பதிலே அதிகம் வந்தது.

இந்நிலையில் பணமதிப்பிழப்ப அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை வங்கிகளில் இருந்த பணம் எவ்வளவு என்ற தகவல் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்… இந்த கேள்விக்கு தகவல் அளிப்பவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், பாதுகாப்பு காரணம் கருதி தகவல் அளிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு தயார் ஆனது குறித்தும், இதன் மீதான ஆய்வுகள் குறித்த கேள்விக்கு… இந்த தகவல் அளித்தால் நாட்டில் இறையான்மைக்கும், ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி பதில் கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி இந்த தகவல் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.