சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படடுள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்ற னர். தனியார் பால் நிறுவனங்கள் அதிகவிலைக்கு பால் கொள்முதல் செய்வதால், ஆவின் நிர்வாகமும் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பல முறை வலியுறுத்தி வந்த நிலையில், கவன ஈர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. அதை மாநில அரசு கண்டுகொள்ளாத நிலையில், 17ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு பால் உற்பத்தியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதையடுத்து நேற்று (16ந்தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன், பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது.
அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு ‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம். குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப் பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.
பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு அடுத்த நசியனூரில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர். மேலும் கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன், இன்று வெள்ளிக்கிழமை காலை, மாநில தலைவர் வழக்கறிஞர் வாழப்பாடி ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள், கறவை மாடுகளுடன் வந்து, பால் உயர்வை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களால் ஆவின் பால் விநியோகம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.