Demand raised for five-year exemption from NEET: Puducherry CM

 

நீட் தேர்வில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு விலக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ஊர்திரும்பிய நாராயணசாமி, சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்கள் நீட் எனப்படும் மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி அடைவதில் கடினமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என நிதிஆயோக் கூட்டத்தில் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் எனவும் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலமும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதுடன், நிவாரணம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி உதவியை அளிக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.