சென்னை: தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு 3ஆக உயர்ந்துள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது தாக்கம் சற்றே குறைந்து வரும் நிலையில், தற்போது டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர் குணமடைந்த நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
பாதிக்கப்பட்ட 3 பேரில், ஒருவர் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் , மற்றொருவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் மதுரையை சேர்ந்தவர். அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர். மதுரையில் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர், ஏற்கனவே குணமடைந்து வீடுதிரும்பிவிட்ட நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் சிகிச்சை தரப்பட்டு வருகிறது
டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனைக்கான கூடங்களை சென்னையில் நிறுவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இது போன்ற வைரஸ் பரிசோதனைகளை கண்டறியக்கூடிய பரிசோதனை மையங்கள் நாட்டிலேயே மொத்தம் 14 இடங்களில் மட்டும் உள்ளது. சென்னையிலும் டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரி இருப்பதாகவும் கூறினார். மேலும், தற்போதைய நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்ற நிலை இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.