டெல்லியில் கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கவழிச் சாலை சிதிலமடைந்ததை அடுத்து அதனை பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
₹777 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது.
2022ல் திறந்து வைக்கப்பட்ட 6 வழிப்பாதை கொண்ட இந்த சுரங்கப்பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சுரங்கம் திறந்த ஓராண்டில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் டெல்லியில் பெய்த பெருமழை காரணமாக யமுனை நதி பெருக்கெடுத்து ஓடியதை அடுத்து இந்த சுரங்கப்பாலம் சுமார் ஒருமாத காலம் பயன்படுத்த முடியாமல் மூடி இருந்தது.
பின்னர் இதில் தேங்கியிருந்த நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட நிலையில் சுரங்கத்தின் பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அந்த விரிசல் வழியாக தண்ணீர் ஊற்றெடுத்து சாலையில் தேங்குகிறது.
இதனை அவ்வப்போது வெளியேற்றி வரும் மாநகராட்சியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவற்றில் ஏற்பட்ட விரிசலை மறைக்க தகரம் வைத்து அடித்தனர்.
இது கைகொடுக்காததை அடுத்து விரிசலுக்கு இடையே பஞ்சு போன்ற பொருட்களை வைத்து தண்ணீரை உறிஞ்ச வழி செய்ததுடன் அதன் மீது தகரத்தை வைத்து வெளியில் தெரியாத வண்ணம் மூடி வைத்தனர்.
இருந்தபோதும் சாலையில் தண்ணீர் ஊற்றுபோல் சுரப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதுடன் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழும் நிலையும் ஏற்பட்டது.
பிரகதி மைதான் சுரங்கப் பாலம் சிதிலமடைந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த சுரங்கப்பாலத்தை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் சுரங்கம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பழுதுபார்ப்பது சாத்தியமில்லை முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சுரங்கப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் இந்த சுரங்கப்பாலத்தை புதிதாக கட்ட ரூ. 500 கோடி முன்பணம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இருந்தபோதும், பிரதமர் மோடி திறந்து வைத்த ரூ. 777 கோடி செலவில் உருவான பாலம் ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது டெல்லி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.