டெல்லி: கியான்வாபி மசூதி மற்றும் சிவலிங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ரத்தன் லால் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்,டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ரத்தன் லால் என்பவர் கியான்வாபி மசூதி – சிவலிங்கம் குறித்து சர்ச்சைக் குரிய கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், லால்  “சிவலிங்கத்தின் மீது இழிவான, தூண்டுதல் மற்றும் ஆத்திரமூட்டும் டிவீட்டை” பகிர்ந்துள்ளார். அவரது கருத்து “ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது” இதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் உள்ளதாகவும், அதனால், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153A, 295A ஆகியனவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த புகார் மனுவை பதிவு செய்து, வழக்குப்பதிவு செய்து போலீஸார்  லாலை கைது செய்தனர். அவர் மீது எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தனது பதிவைத் தொடர்ந்துமிரட்டல்கள் வருவதாக தெரிவித்த லால்,  எனது பதிவுக்காக இத்தகைய மிரட்டல்களும், வசவுகளும் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.  நம் நாட்டில் மட்டும்தான் எதெற்கெடுத்தாலும் மக்களின் மத உணர்வு புண்பட்டுவிடுகிறது. அப்படியென்றால் என்ன செய்வது? வாயில் பேண்டேஜ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் போல?” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கியான்வாபி மசூதி தொடர்பாக நீதிமன்றம் அமைத்த குழுவினரின் ஆய்வறிக்கையில், மசூதியின் அடித்தள சுவர்களில் இந்து கோயில்களின் பல சின்னங்கள் கிடைத்துள்ளன. இதில், தாமரை, ஸ்வஸ்திக், மேளம், திரிசூலம், பிளிரும் துதிக்கையுடன் யானை முகங்கள் மற்றும் மணிகள் என பல இடங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, மசூதியின் 3 கோபுரங்களின் தூண்களிலும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சமஸ்கிருதம் கலந்த பழங்கால இந்தி வாசகங்களும் 7 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.