டெல்லி :
கொரோனா வைரஸ் தொற்றுநோய், இறப்பு விகிதங்கள், தனிமைப்படுத்தல்கள் மற்றும் பொருளாதார சீரழிவு பற்றிய இடைவிடாத செய்திகளுக்கு மத்தியில்; ஒற்றுமை, நட்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் மனதைக் கவரும் பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
அப்படி ஒரு நிகழ்வு, டெல்லியில் இன்று நிகழ்ந்திருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலனளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சைக்காக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளை ஏற்று, டெல்லி தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சைபெற்று நலமுடன் வீடுதிரும்பிய நபர் தனது பிளாஸ்மாவை தானம் செய்தார்.
மேலும், தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதிகம் உள்ள டெல்லியின் நரேலா பகுதியில் இருந்து பலரும் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்யமுன் வந்திருக்கிறார்கள்.
இந்தியாவில், பிரிவினைவாதத்தை முறியடித்து அன்பும் சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் விளங்குவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.