டில்லி
டில்லி நகர வாசிகளின் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டில்லியில் தற்போது 49 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 35% பேர் மாதந்தோறும் 200 யூனிட்டுகளுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். குளிர் காலங்களில் சுமார் 70% மக்கள் 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இன்று டில்லி அரசு புதிய மின்கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது.
அது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டில்லி மக்களுக்கு இனி மாதந்தோறும் இலவசமாக 200 யூனிட்டுகள் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. எனவே 200 யூனிட் வரை உபயோகிப்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. அதைப் போல் 201 முதல் 400 யூனிட்டுகள் வரை உபயோகிப்போர் அளிக்கும் மின் கட்டணத்தில் 50% அரசு மானியமாக வழங்க உள்ளது.
முந்தைய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் மக்களுக்கு ரூ.928 மின் கட்டணம் விதித்து இருந்தது. இந்த ஆட்சி வந்த பிறகு நேற்று வரை மக்கள் ரூ.622 செலுத்தி வந்தனர். தற்போது இந்த கட்டணம் முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 250 யூனிட்டுகளுக்கு முந்தை அரசு ரூ.1250 வசூலித்து வந்தது. ஆம் ஆத்மி அரசு அளித்த மானியத்துக்குப் பிறகு அவர்கள் ரூ.800 செலுத்தி வந்தனர். தற்போது அவர்கள் ரூ.252 செலுத்தினால் போதுமானது. ஏற்கனவே டில்லி அரசு மானியமாக ரூ.1800 முதல் ரூ.2000 கோடி மானியம் அளிப்பதால் இது அதிக அளவில் இருக்காது.
தற்போது நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களில் டில்லியில் மட்டுமே மிகக் குறைவாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.