டெல்லி-என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும் என்றும் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை படிப்படியாக திறக்க மாசு கட்டுப்பாட்டு ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 27 முதல் திறக்கப்படும். இருப்பினும் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் நடந்த மாசுகட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குளிர்கால விடுமுறைக்குப் பிறகுதான் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகு, டில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
பள்ளிகள் நீண்ட காலம் மூடியிருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உரியதாக்கிவிடும் என்று டெல்லி பெற்றோர் சங்கத் தலைவர் ஹரிஷ் மெஹ்ரா கூறினார்.
ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகள் விரைவில் திறக்கப்படும் என்றும், ஆரம்ப வகுப்புகளும் டிசம்பர் 20 முதல் தொடங்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.