டில்லி,

லைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக 22ந்தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், போராடி வரும் விவசாயிகள் அமைத்துள்ள  கூடாரத்தை அகற்ற டில்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம், விவசாயிகளுக்கு பென்சன் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள்  தலைநகர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் 37 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தற்போது பொன் ராதாகிருஷ்ணனின் வேண்டு கோளை ஏற்று தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அய்யாகண்ணு அறிவித்தார்.

இந்நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் போடப்பட்டுள்ள கூடாரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளின் உடமைகளை  அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் மிரட்டப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் தற்போது மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.