டில்லி

விவசாய போராளிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு டில்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் கடந்த நவம்பர் இறுதி முதல் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தை நிறுத்த மத்திய அரசு நடத்திய 14 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

அரசு தரப்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில்லை என தீவிரமாக உள்ளனர்.  இதையொட்டி விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.  இதில் ஒரு கட்டமாக விவசாய சங்கங்கள் வரும் 26 ஆம் தேதி அதாவது குடியரசு தினத்தன்று அணிவகுப்பு முடிந்த பிறகு 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர்.  இதற்கு அனுமதி அளிக்கக் கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், “இன்று டில்லி காவல்துறையினருடன் ஒரு சிறு சந்திப்பு  ஒன்றை நாங்கள் நிகழ்த்தினோம்.  அப்போது டில்லி காவல்துறையினர் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்துள்ளனர்.   ஏற்கனவே நான் சொன்னது போல விவசாயிகலின் டிராக்டர் பேரணி அமைதியான முறையில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.