டில்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வரும் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை கடந்த மாதம் 23ந்தேதி நியமனம் செய்து அறிவித்தார்.
இவர், மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அடங்கி உள்ள உ.பி. மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். பிரியங்காவுக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே பிரியங்காவை அரசியலுக்கு வர வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் வேண்டு கோள் விடுத்து வந்த நிலையில், தற்போது பிரியங்காவுக்கு பதவி வழங்கப்பட்டது காங்கிர சாரிடையே புது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பிரியங்கா காந்தி இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி பணிகளில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த அறையின் வாசலில், பிரியங்கா காந்தி வதேரா என அச்சிடப்பட்ட பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.