டில்லி

டில்லி மெட்ரோ ரெயிலில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரூ.2.8 கோடி ரொக்கம், நகைகள், லாப்டாப்புகளை மறந்து விட்டுச் சென்றுள்ளனர்.

டில்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்தாக டில்லி மெட்ரோ விளங்கி வருகிறது தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்யும் இந்த மெட்ரோ ரெயிலில் பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் கவனித்து வருகின்றனர். இவர்கள் 24 மணி நேரம், வாரத்துக்கு 7 நாட்கள், வருடத்துக்கு அனைத்து நாட்கள் என இரவும் பகலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது  பணி ரெயில் நிலையம், வளாகம், ரெயில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது.

இந்த பாதுகாப்புப் படையினர் தங்கள் சோதனையில் அவசரமாகச் செல்லும் பயணிகள் மறந்துவிட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து பத்திரப்படுத்தி உரியவரிடம் சேர்க்கும் பணியையும் செய்து வருகின்றனர். இதில் ரொக்கம், தங்க நகைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பல விலையுயர்ந்த பொருட்கள் அடங்கும். ஒரு நாளைக்கு சுமார் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தும்  டில்லி மெட்ரோ ரெயிலில் மக்கள் அவசரத்தில் பொருட்களை மறந்து விட்டுச் செல்வது சகஜம் என பாதுகாப்புப் படைத் துணை ஆய்வாளர் ஹேமேந்திர சிங் தெரிவிக்கிறார்.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் ரொக்கமாக ரூ.59,87,645  கைப்பற்றப்பட்டு உரியவரிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.81,04,602 ஆக இருந்துள்ளது. அத்துடன் 2017 ஆம் ஆண்டு ரூ.70,73,802 ஆகவும் 2016 ஆம் வருடம் ரூ.75,15,537 ஆகவும் இருந்துள்ளது. இதைத்தவிரக் காசோலைகள், வரைவோலைகள், வெளிநாட்டுப் பணம், மடிக்கணினிகள், மொபைல்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஐபாட்கள் உள்ளிட்ட பலவற்றைக் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் அதை உரியவர்களிடம் சேர்த்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் ஜனவரி மாதம் ரூ 32,91,939 , பிப்ரவரி மாதம் ரூ.1,06,009, மார்ச் மாதம் ரூ 35,348, ஏப்ரல் மாதம் ரூ.48,744, மே மாதம் ரூ.4,47,534 மற்றும் ஜூன் மாதம் ரூ.3,47,144 என ரொக்கப்பணத்தை கண்டுபிடித்து உரியவர்களிடம் சேர்த்துள்ளனர்.