புதுடெல்லி:
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய கூட்டத்திற்க்கு பிறகு  நேற்று தேசிய தலைநகரில் உள்ள உணவகங்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது. வாராந்திர சந்தைகளும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதிக்கப்படும் எனவும், இப்போதைக்கு உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு ஆளுநர் அணில் பைஜலிடம் உணவகங்கள் மற்றும் வாராந்திர சந்தைகளை திறப்பது பற்றி பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தது. ஆனால் ஆளுனர் அணில் பைஜல் இந்த முடிவை முன்பு ரத்து செய்திருந்தார்.
இதைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி கூறியிருந்ததாவது:
பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது, நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் பொழுதும் கூட அங்கு உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் வாராந்திர சந்தைகள் திறக்கப்படுகின்றன எனவும்,  மேலும் தற்போது டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது ஆகையால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும்,  நிறுவனங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை அரசுக்கும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.