டெல்லி: மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள், அது உங்களை வேலை என  மோடி தலைமையிலான மத்திய அரசை டெல்லி  உயர்நீதி மன்றம் கடுமையாக சாடியுள்ளது.  ஆக்சிஜன் தரமறுக்கும் தொழிற்சாலையை கையகப்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்தற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காத நிலையில், மருந்துகளுக்கும்,ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடுமையான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இது தோடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கடந்தவிசாரணையின்போதே, தொழிற்சாலைகள் ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை விதித்ததுடன்,  அவைகளை மருத்துவ மனைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்   கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பு மற்றும் அவர்களின் சிகிச்சை தேவையை கருதி, அவசரமாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர  வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு அவசரம் கருதி நேற்று இரவில் விசாரிக்கப்பட்டது.  டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியதுடன் மத்தியஅரசின் தான்தோன்றித்தனத்தை கடுமையாக சாடியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேட்டன் சர்மாஆஜராகி வாதாடினார். வாதங்களைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனித உயிர்கள் தற்போது ஆபத்தில் உள்ளது. 130 கோடி மக்கள்  தொகையைக் கொண்ட இந்த நாட்டில் இரண்டு கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் கூறுகிறது. உண்மையான பாதிப்பு இதைவிட 5 மடங்கு இருந்தாலும், 10 கோடி பேருக்குத்தான் கொரோனா இருக்கும். ஆனால், மீதமுள்ள மக்களை காப்பாற்ற மத்தியஅரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மத்தியஅரசு  இதே வேகத்தில் செயல்பட்டால்,  ஒரு கோடி பேரைக் கூட நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்தனர்.

நாட்டில் தற்போது எழுந்துள்ள நிலைமையின் தீவிர தன்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும், நீதிபதிகளாகிய நாங்கள் ஒரு அரசை நடத்த இங்கு வரவில்லை ஆனால், அதை  உணர வேண்டுமென்றே  கருதுகிறோம். இது தொடர்பாக நாங்கள் மத்தியஅரசுக்கு நேற்றே உத்தரவிட்டும் மத்திய அரசு எதுவும்இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது  அதிர்ச்சி அளிக்கிறது

மனித உயிர்கள் அரசுக்கு முக்கியமில்லையா? இன்று 22 பேர் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகி இருக்கிறார்கள். என்ன செய்வீர்களோ தெரியாது. தொழிற்சாலை களிடம் கெஞ்சியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வழங்க வேண்டும். ஆக்சிஜன் தரமறுக்கும் தொழிற்சாலையை கையகப்படுத்துங்கள் என்று அதிரடியாக கூறிய நீதிபதிகள்,  மக்களின் வாழ்க்கையை விடப் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என்று கூறினர்.

மேலும், ஆக்சிஜனுக்காக  தொழிற்சாலைகள் காத்திருக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகள் காத்திருக்க முடியாது. போதுமான அளவில் மருந்துகள் இருந்தும், சரியான நேரத்தில் தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேரவில்லை என்றால், ஆட்சியாளர்களின் கைகளில் ரத்தக் கறை படியும் என் பதை மறந்து விடாதீர்கள்.

இவ்வாறு நீதிபதிகள் கடுமையாக சாடினர்.