டெல்லியில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து அங்கிருந்து வெளியேற முடியாமல் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்த பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், “அந்தப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை ஆக்கிரமித்து அதன் மீது பலர் வீடு கட்டி உள்ளதால் அந்த கால்வாயில் மழை நீர் செல்ல முடியவில்லை” என்று வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு பயிற்சி மையத்தில் வெள்ளம் போல் குபுகுபுவென நீர் புகுந்ததை அடுத்து மாணவர்களால் வெளியேற முடியவில்லை என்று தெரிவித்தனர்.

மழைநீர் வடிகால் முறையாக பரமாரிக்கப்படாததே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி முன் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு