டில்லி

 மணிப்பூரில் இருந்து தாய்லாந்து சென்று அங்கு பாஸ்போர்ட்டை தொலைத்து வெளிநாட்டிலேயே வாழும் தம்பதியருக்கு புது பாஸ்போர்ட் வழங்க டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

மணிப்பூரை சேர்ந்த லுயிங்கம் லுயிதாய் அவர் மனைவியுடன் மணிப்பூருக்கு விடுமுறையை கழிக்க 1994ஆம் வருடம் சென்றுள்ளார்.   அங்கு அவர் மனைவியின் பாஸ்போர்ட் திருட்டு போய் விட்டது.   அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் கேட்டு முறையிட்டனர்.  ஆனால் அவர்கள் கோரிக்கை நிராகரிப்பட்டது.

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இந்த தம்பதியருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அது சட்ட விரோதமானது எனவும் கூறி இந்திய தூதரகம் பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டது.   லுயிங்கம்மும் அவரது மனைவியும் தங்களை பாஸ்போர்ட் இல்லாததால் தாய்லாந்து போலீஸ் துன்புறுத்துவதாக கூறி மீண்டும் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப் பட்டது.

பிறகு இந்த தம்பதியர் ஐக்கிய நாடுகள் அகதிகள் கமிஷனை அணுகினர்.  அவர்கள் இருவரையும் கனடா நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.   கனடா நாட்டில் இந்திய தூதரகம் எந்த காரணமும் சொல்லாமல் லுயிங்கம்மின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து விட்டது.   இந்தியாவுக்கு இருவரும் திரும்ப இயலாத நிலையில் தள்ளப்பட்டனர்.

இது குறித்து தம்பதியர் தொடுத்த வழக்கு டில்லி உயர்நீதி மன்ற நீதிபதிகள் கீதா மிட்டல், மற்றும் ஹரிசங்கர் அடங்கிய அமர்வின் கீழி விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போது உடனடியாக தம்பதியருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அந்த தீர்ப்பில், “அரசின் தவறான முடிவால் இரண்டு இந்தியர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் கமிஷனிடம் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டது பரிதாபகரமானது.   அடையாளத்தை தொலைத்து விட்டு அயல்நாட்டில் தவிக்க விடுவது நியாயமற்ற செயல்.   அவர்கள் பேரில் குற்றம் இருப்பின் நமது நாட்டுக்கு அழைத்து வந்து விசாரிப்பதை விடுத்து இப்படி 23 வருடங்கள் தவிக்க விடுவது மனிதாபமற்ற செயல்” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது கனடா நாட்டு குடியுரிமை பெற்று வாழும் தம்பதியர் தங்களுக்கு இந்திய பாஸ்போர்ட் கிடைத்ததும் அந்த குடியுரிமையை திருப்பி அளித்துவிட தயாராக இருப்பதாக மகிழ்வுடன் கூறி உள்ளனர்.