டில்லி:

டில்லி அருகேயுள்ள குர்கானில் ரியான் சர்வதேச பள்ளியின் கழிவறைக்குள் கடந்த 8-ம் தேதி 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இதேபோல் டில்லியில் பள்ளி ஊழியரால் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பெங்களூரு பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பள்ளி ஊழியரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

இதுபோல் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிபிஎஸ்இ பள்ளியில் பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. பள்ளிகளில் மாணவ – மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ.யின் புதிய வழிகாட்டு நெறிகளில், பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மாணவர்களின் உளவியல் செயல்பாடு ஆய்வு, பாதுகாப்பு தணிக்கை, பாதுகாப்பு தேவைகளை கண்டறிய பெற்றோர்-ஆசிரியர் -மாணவர் குழுக்கள் அமைத்தல், போலீஸ் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாணவ- மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதுகாப்பு உணர்வுடன் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலை பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும்.

இந்த வசதிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என பள்ளி நிர்வாகங்களை சி.பி.எஸ்.இ. வலியுறுத்தி உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ச்சியான பாதுகாப்பு ஆய்வு, சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், காவல்துறையின் ஆய்வு என முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பள்ளிக்கு வெளிநபர்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிக்கு வந்து செல்பவர்களை கண்காணிக்க வேண்டும். எந்தஒரு ஆபத்தில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பள்ளி பணியாளர்களின் பொறுப்பு. பள்ளி ஊழியர்களுக்கு சரியான பயிற்சி அளிக்க வேண்டும். பபாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தவறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.