டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆவணங்களை ஆய்வு செய்ய சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
ப.சிதம்பரம் கடந்த 2007-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது. இந்த புகாரில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் மீதும் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் பிற குற்றவாளிகளின் மீது சிபிஐ தாக்கல் செய்ய ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) மனு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தள்ளுபடி செய்தார்.