டில்லி

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் டிவிட்டர் பதிவுகளுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.   அப்போது அவருக்கு விசேஷ நீதிமன்றம் பிணை அனுமதித்தால் அமலாக்கப் பிரிவுத் துறை அவரை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.   இந்த உத்தரவை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

குருமூர்த்தி தனது டிவிட்டர் பகுதியில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உதவி வழக்கறிஞராக இருந்த நீதிபதி முரளிதர் கார்த்தி சிதம்பரம் வழக்கில் தீர்ப்பளித்தது குறித்தும் விமர்சனங்கள் எழுப்பி இருந்தார்.   இந்த டிவிட்டர் பதிவுக்கு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இந்த விவகாரத்தை டில்லி உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் முரளிதர் மற்றும் மேத்தா அடங்கிய அமர்வு, “நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குருமூர்த்தி விஷமத்தனமான கருத்து தெரிவித்துள்ளார்.   அவர் இது போன்ற தவறான கருத்து தெரிவித்தது குறித்து சிறிதும் கவலை கொள்ளவில்லை.   இதுவரை அவர் தனது நிலையில் இருந்து மாறவும் இல்லை.   இந்த பதிவுகளை திரும்பப் பெறவும் இல்லை.   சுமார் 2.6 லட்சம் ரசிகர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் இது போல பொறுப்பற்ற தவறான பதிவுகளை பதிவது மிகவும் தவறான செய்கையாகும்”  என தெரிவித்துள்ளது.