டில்லி

கொரோனா 3வது அலையைச் சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சியளிக்க டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  எனவே 3வது அலையைச் சமாளிக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  அவ்வகையில் டில்லி அரசும் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

அவற்றில் ஒன்றாக கொரோனா சிகிச்சை செய்ய வசதியாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில், 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.  இந்த பயிற்சி ஜூன் 28ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்கு இரண்டு வாரங்கள் செவிலியர் பணி மற்றும் உயிர் காக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவிருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி அரசு இது குறித்து ”இந்த ‘பயிற்சியை மேற்கொள்ள விரும்பும் இளைஞர்கள், பிளஸ் 2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்; மேலும் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.   அவர்கள் பணி புரியும் நாள்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். நாளை அதாவது ஜூன் 17ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்”’ என, அறிவித்துள்ளது.