டெல்லி: மாணவா்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், டெல்லி அரசு புதிய பள்ளி பை கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.

புதிய பள்ளி பை கொள்கைக்கு அனுமதி அளித்து கடந்த மாதம் டெல்லி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில் பல பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

கனமான புத்தக பைகள் மாணவா்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும். புத்தக பை முதுகெலும்பு மற்றும் முழங்கால்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

பல மாடி கட்டடங்களில் செயல்படும் பள்ளிகளில், குழந்தைகள் கனமான புத்தக பைகளுடன் படிக்கட்டுகளில் ஏறுவது சிக்கலை மேலும் மோசமாக்குகிறது. பாடப்புத்தகங்கள் முதல் 1 மற்றும் 2 வகுப்புகளுக்கான ஒற்றை நோட்புக் வரை, மாணவா்கள் அதிக எடையை சுமக்காமல் இருப்பதை உறுதி செய்ய புத்தக பைகளை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

பொருத்தமான வகையான புத்தக பைகள் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்தல், பைகளின் இரு பட்டைகளையும் மாணவா்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்டவை அரசின் பரிந்துரைகளில் இடம்பெற்று உள்ளன. இது தொடா்பாக பள்ளி முதல்வா்களுக்கு டெல்லி கல்வி இயக்குநரகம் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.