டெல்லி அருகே யமுனை ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் நச்சு நுரை படர்ந்து காணப்படுகிறது.

நகரில் உள்ள தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் மற்றும் கழிவுநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் இத்தகைய நுரை உருவாவதாக கூறுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றில் நீர் குறையும் நேரத்தில் இதுபோன்று நச்சு நுரை தோன்றுகிறது.

இந்த ஆண்டு சத் பூஜையின் போது பக்தர்கள் நதியில் நீராட சென்ற நிலையில் இதுபோன்று நச்சு நுரை உருவானதும், அந்த நுரையிலேயே அவர்கள் நீரில் மூழ்கி எழுந்ததும் சர்ச்சையானது.

இந்நிலையில், யமுனை நதியில் உள்ள நுரையை போக்க டெல்லி நீர்வளத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

நுரை பொங்கி வருவதைத் தடுக்க நதிநீரில் தண்ணீர் பீய்ச்சி அடித்து நுரையை விரட்டுவதும், மூங்கில் தட்டிகளை மதில்போல் அமைத்து கரையோரம் நுரை பொங்கி வரமால் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவைதவிர, படகுகளில் கயிற்றைக் கட்டி ஆற்றின் மேற்பரப்பில் உள்ள நுரையை சத் பூஜைக்காக பக்தர்கள் நீராடும் துறையில் இருந்து அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய இந்த முயற்சிகள் விமர்சனத்திற்கு உள்ளானதோடு, இது வைகையாற்று நீர் வற்றாமல் இருக்க தெர்மோல் பயன்படுத்தியதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என்று கூறுகின்றனர்.

மேலும், ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்று பின் இந்திய வருவாய் துறையில் அதிகாரியாக பணியாற்றிய இன்றைய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேற்கொண்டிருக்கும் இதுபோன்ற கேலிக்கூத்தான முயற்சிகளால் மக்கள் பணம் விரயமாவது தான் மிச்சம் என்றும் சாடியிருக்கின்றனர்.