டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொற்று அதிகரிப்பு காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளதால், அதை கட்டுப்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 17 ஆயிரத்திற்குமதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததால், வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மக்கள் பொதுவாக வார நாட்களில் வேலை மற்றும் வார இறுதி நாட்களில் பொழுதுபோக்குக்காக வெளியே செல்வார்கள். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கிறது. இந்த சங்கிலி பரவலை உடைக்க வார இறுதி நாட்கள் லாக்டவுன் போடப்பட்டு உள்ளதாகவும், “அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஜிம்கள், மால்கள் மற்றும் ஆடிட்டோரியமும் மூடப்பட்டிருக்கும், மேலும் மறு உத்தரவு வரும் வரை சினிமா அரங்குகள் 30 சதவீத திறனுடன் செயல்படும் என்றும், வார இறுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.,
முன்னதாக தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்த முதல்வர், அதன்பிறகே, வார இறுதி நாட்களில் லாக்டவுன் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
வார இறுதி நாட்கள் ஊரடங்கு என்பது, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) இரவு 10 மணி முதல், ஏப்ரல் 19 (திங்கள்) காலை 6 மணி வரை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.