டெல்லி; பல்வேறு பிரச்சினைகளால் சிக்கி தவிக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காலை 10மணி முதல்  தியானத்தில் இருந்து வருகிறார்.  மாலை 5மணி வரை சுமார் 7 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளது. ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதையடுத்து, அவர்களின் இடங்களுக்கு இரண்டு புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் கடும் போட்டி நிலவியதாக தகவல்கள் வெளியானது. இதனால் கடுமையான மன உளைச்சலில் உள்ள கெஜ்ரிவால்,

இன்று ஹோலி பண்டிகையையொட்டி, நாட்டு நலனுக்காக தியானம் செய்யப்போவதாக அறிவித்து தியானத்தில் இருந்து வருகிறார். இன்றைய  நாள் முழுவதும் தியானம் மூலம்  பிரார்த்தனை செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது  இதனால் நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய கெஜ்ரிவால் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.