டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அறிவித்துள்ள டெல்லி சலோ போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.  தொடர்ந்து பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தலைநகரில் குவிந்து வருவதால்,  டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியை தங்கள் போராட்டத்துக்கு ஒதுக்காமல், புராரி மைதானத்தை ஒதுக்கியதால் எல்லையிலேயே பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் மூடப்பட்டன. எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

போராட்டக்காரர்கள் தாங்கள் கொண்டுவந்த உணவு தானிங்களை சமைத்து தாங்களும் உண்டு, போராட்டத்தை ஒடுக்க வந்துள்ள காவல்துறையினருக்கும் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

விவசாயிகள் நாள்தோறும் குவிந்து வருவதால், போக்குவரத்து நெரிசலில் டெல்லி சிக்கித் திணறி வருகிறது. டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து டெல்லி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப்பாதையை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, டெல்லி போக்குவரத்து போலீசார் டிவிட்டர் மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ‘சிங்கு, திக்ரி எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்லவும். முகார்பா சவுக், ஜிடிகே சாலையிலிருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், சிக்னேச்சர் பாலம், ரோஹினி, ஜிடிகே சாலை, என்ஹெச்–44, சிங்கு எல்லை வழியாகச் செல்வதைத் தவிர்க்கவும். திக்ரி எல்லை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ஹரியானாவிலிருந்து வரும் ஜார்கோடா, தான்ஸா, தருலா, ஜதிகேரா, பதுசாரி, கபசேரா, ரஜோரி, என்ஹெச்8, பாலம் விஹார், துந்தாஹேரா எல்லையைப் பயன்படுத்தவும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில்,  டிசம்பர் 3ம் தேதி 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கப் பிரிநிதிகளுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகஅமைச்சர் தோமர் அறிவித்துஉள்ளது.  ஆனால் அதற்கு முன்பாக விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும் என்றுவேண்டுகோள் விடுத்தார். ஆனால், அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்க முடியாது. புராரி மைதானம் என்பது திறந்தவெளி சிறைச்சாலை போன்றது. அங்கு செல்ல முடியாது என விவசாயிகள் மறுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 5-வது நாளாக வலுத்துள்ளது.

இதற்கிடையே நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் விவசாயிகள் போராட்டம் குறித்தும் இன்று  நீண்டநேரம் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர்.