புதுடெல்லி: கேபிஎம்ஜி, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர், எர்னஸ்ட் & யங் மற்றும் டெலாய்ட் இந்தியா போன்ற பட்டயக் கணக்கு நிறுவனங்கள், வழக்காடும் தொழிலில் ஈடுபடக்கூடாது என டெல்லி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

மேலும், இதுவரை அந்த நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர் பட்டியலை அளிக்குமாறும் பார் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய சட்ட நிறுவனங்களுடைய சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் லலித் பாசின் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் வழக்காடும் பயிற்சியில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என இவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

பட்டயக் கணக்காளர் சட்டப்படிதான் கணக்காளர்கள் செயல்பட வேண்டும் மற்றும் வழக்கறிஞர் சட்டப்படிதான் வழக்காடும் தொழில் நடைபெறுகிறது. எனவே, ஒரு துறை இன்னொரு துறையை ஆக்ரமிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, டெல்லி பார் கவுன்சிலால், வருகிற ஜுலை 12ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.